திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கம்; உள்ளாட்சி அமைப்புகளில் விவசாயிகள் அவதி
கோவை; பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கப்பட்டதால், இயற்கை உரம் கிடைக்காமல், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவை மாவட்டத்தில், மாநகராட்சி தவிர பிற உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் வாயிலாக, சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, பல்வேறு படிநிலைகளுக்குப்பின், இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. சமீபகாலமாக, உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கப்பட்டு விட்டது. அதனால், கிராமங்களில் சேகரமாகும் திடக்கழிவுகள், ஆங்காங்கே குவித்து தீயிட்டு கொளுத்தப்படுகிறது.பள்ளவாரிகளிலுள்ள நீர்வழிப்பாதைகளிலும், குவித்து வைக்கப்படுகிறது. இதனால் நீர்வழிப்பாதைகள் மாசுபட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் சமூக விரோதிகள், அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.அதனால், விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஊறு ஏற்படுத்தாமல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, மீண்டும் உள்ளாட்சிகளில் செயல்படுத்த வேண்டும்.அதற்கான முயற்சிகளை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று, கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தனிடம், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் தண்டபாணி, மாநகர செயலாளர் காளிச்சாமி, பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.