உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளில் வேகமாக நடக்கிறது திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி

ஊராட்சிகளில் வேகமாக நடக்கிறது திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி

தொண்டாமுத்தூர் : தினமலர் செய்தி எதிரொலியாக, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி புனரமைக்கப்பட்டு வருகிறது.தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு, தேவராயபுரம், வெள்ளிமலைபட்டிணம், நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி, தென்னமநல்லூர், மத்வராயபுரம், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய, 10 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்து, உரம் தயாரிக்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இத்திட்டத்தை, ஒரு சில ஊராட்சிகள் மட்டுமே முறையாக பின்பற்றி வருகின்றன. மற்ற ஊராட்சிகளில், சாலையோரங்களிலேயே குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் குப்பையை அகற்றாமல், தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், காற்று மாசுபடுவதோடு, அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கும், உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக, வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து வீணாகி வருகின்றன. மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகைகள், பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த 12ம் தேதி, படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளிலும், பி.டி.ஓ., ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வில், நமது செய்தியில் வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து, அனைத்து ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பை தரம் பிரித்தல், மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையை புனரமைத்து, முறையாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.அனைத்து ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் மண்புழு உர கொட்டகையை, புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குப்பையை எரிக்கக் கூடாது. முறையாக சேகரித்து, தரம் பிரிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை பணியை முறையாக மேற்கொள்வது குறித்து, ஊராட்சி செயலர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை