மாநகராட்சி பணியாளர்களுக்கு விபத்து காப்பீடு சிறப்பு முகாம்
கோவை: மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களுக்கு விபத்து காப்பீடு உட்பட பல்வேறு வசதிகள் பெறுவதற்கான சிறப்பு முகாம், நேற்று துவங்கியது.கோவை மாநகராட்சியில் அலுவலர்கள், பணியாளர்கள் என, 5,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள் ஊதியம் பெறும் இந்தியன் வங்கி உட்பட ஏழு தேசிய மயமாக்கப்பட்ட, வங்கிகளில் விபத்து காப்பீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.இதற்கென, உக்கடம் பெரியகுளக்கரையில் அமைந்துள்ள கூட்டரங்க வளாகத்தில், மாநகராட்சி கமிஷனர் நேற்று, சிறப்பு முகாமை துவக்கிவைத்தார். மத்திய மண்டலத்தில் பணிபுரிவோர், 100க்கும் மேற்பட்டோர் முகாமில் பயனடைந்தனர்.விபத்து காப்பீடு உட்பட பல்வேறு வசதிகள் குறித்து, வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தினமும் ஒரு நாள் சிறப்பு முகாம் இடம்பெறுகிறது.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிபேந்திரன், மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.