சிறப்பு துார்வாரும் பணிகள் கண்காணிப்பு குழு ஆய்வு
ஆனைமலை: ஆனைமலை அருகே, கால்வாய் சிறப்பு துார்வாரும் பணிகளை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பி.ஏ.பி., திட்டத்தில் பாலாறு படுகையில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களும்; ஆழியாறு படுகையில் புதிய ஆயக்கட்டில், 44,000 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. பாலாறு படுகையில், நான்கு மண்டலங்களாகவும், ஆழியாறு படுகை, இரண்டு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் நீர்வளத்துறை பொறுப்பில் உள்ளது. ஆயிரம் கி.மீ., துாரம் உள்ள பகிர்மான கால்வாய்கள், உபபகிர்மான கால்வாய்கள் பாசன சங்கங்களின் பொறுப்பில் உள்ளது. கால்வாய்கள் துார்வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டார். நிதி ஒதுக்கீடு செய்த பின் கடந்த, 13ம் தேதி பணிகள் துவக்கப்பட்டது. கம்பாலபட்டி கால்வாயில் சிறப்பு துார்வாரும் பணியை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதன்பின், முறையாக பணிகளை மேற்கொண்டு சரியான நேரத்தில் நிறைவு செய்ய அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது, ஆழியாறு திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கால்வாயில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, நீர் வழித்தடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், புதர்கள் அகற்றப்படுகின்றன, என அதிகாரிகள் தெரிவித்தனர்.