சிறுமுகை வனப்பகுதியில் சிறப்பு குழுவினர் கண்காணிப்பு
மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் அண்மையில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, வேட்டை கும்பல் ஒன்று தப்பித்து ஓடியது. அப்போது நாட்டு துப்பாக்கி ஒன்று, தோட்டவுடன் கீழே போட்டுவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது.இச்சம்பவத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் சிறப்பு குழுவினர் துப்பாக்கிகளுடன் அடர் வனத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில்,'மேட்டுப்பாளையம் மற்றும் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 10 முதல் 15 கி.மீ., வரை சிறப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் விலங்குகளின் கால்தடம், வேட்டையாடப்பட்ட தடம் போன்றவைகள் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.வனப்பகுதிக்கு வெளியே உள்ள சாலைகளில் சந்தேகப்படும்படியான வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. பழங்குடியின மக்களிடம் வேட்டை கும்பல்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம்' என்றனர்.