பேச்சு போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
கோவை; கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இடைநிலைப் பிரிவில் (6, 7, 8ம் வகுப்பு) நடைபெற்ற பேச்சுப் போட்டியில், மூலத்துறை ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவன் ஸ்ரீதேவ் முதலிடம், சுதர்சன் மூன்றாம் இடம் பெற்றனர். கட்டுரைப் போட்டியில், அதே பள்ளியை சேர்ந்த, நேத்ரா முதலிடமும், பேச்சுப்போட்டியில் ஊக்கப் பரிசை பிரணவ் மற்றும் ஓவியப் போட்டியில் பிரதிக் ஷா ஆகியோர் பெற்றார். முதலிடம் பெற்ற ஸ்ரீதேவ், வருகிற அக்டோபர் 4 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யாசாமி வழங்கினார்.