வேகத்தடை சேதம்; ஓட்டுநர்கள் தடுமாற்றம்
வால்பாறை; வால்பாறை நகரில் அமைக்கப்பட்டுள்ள வேகக்தடை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். வால்பாறையில் இருந்து ஆழியாறு செல்லும் ரோட்டில், நெடுஞ்சாலை சார்பில் பல்வேறு இடங்களில் ரோடு விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. குறிப்பாக, மழை காலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து தவிர்க்க, பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் வேகத்தடை சேதமடைந்துள்ளது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள், விபத்துக்கு உள்ளாகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். வால்பாறை முதல் சோலையாறுடேம் வரை பல்வேறு இடங்களில் வேகத்தடையில் வெள்ளை நிறம் இல்லை. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே மூன்று ரோடுகள் பிரிவில், கூடுதலாக வேகத்தடை அமைக்க வேண்டும். சேதமடைந்த வேகத்தடையை உடனடியாக சீரமைத்து, வெள்ளை நிற கோடு போட வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.