புதுப்பித்த சாலையில் வேகத்தடை தேவை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம், 147.78 கி.மீ., துாரத்திற்கு சாலைகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களாக பெய்த மழை காரணமாக, சாலைகள் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளன. சாலைகளில் அவ்வப்போது 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டாலும், மழைக்கு தாக்குப் பிடிக்காமல் இருந்தது. நகரச் சாலைகளை கடக்க சிரமமாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் செய்வதறியாது திணறினர். இந்நிலையில், தெப்பக்குளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு என, அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சில முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. தேவையான இடங்களில் வேகத்தடை அமைப்பதுடன், வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் குறியீடும் அமைக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.