எஸ்.எஸ்.குளம் அரசு பள்ளி வைர விழா
கோவில்பாளையம்: எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வைர விழா நடந்தது. சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ளது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 3 கோடி ரூபாய்க்கு பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில், கலையரங்கம், ஆய்வுக்கூடம், கழிப்பறை, சைக்கிள் ஸ்டாண்ட், யோகாசன மையம், கிரேனைட் பதித்தல், பேவர் பிளாக் பதித்தல், மெட்டல் சாலை அமைத்தல், முழுவதும் வர்ணம் பூசுதல் என மூன்று கோடி ரூபாய்க்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வைர விழா நடந்தது. புதிதாக அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் திறந்து வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை விமலா வரவேற்று பேசுகையில், ''இப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவில் விருதுகள் பெற்றுள்ளனர். தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்துள்ள னர்,'' என்றார். விழாவில், முன்னாள் எம்.பி., நாகராஜன், 'அட்மா' திட்ட தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி சுரேந்திரன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.