தேச பெருமை, வரலாறு பேசும் தபால் தலைகள்! கண்காட்சியை கண்டு பொதுமக்கள், மாணவர்கள் வியப்பு
கோவை : கோவையில் நேற்று துவங்கிய, தபால் தலை சேகரிப்பு கண்காட்சியை, திரளான பொதுமக்கள், மாணவ, மாணவியர் கண்டு ரசித்தனர்.கோவை மாவட்ட அளவிலான, 'கோவை பெக்ஸ் 2024' தபால் தலை கண்காட்சி, பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் வரவேற்றார். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில், தேச தலைவர்கள், விளையாட்டு, இதிகாசங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள், பாரத ரத்னா விருது பெற்றவர்கள் என்பன உட்பட, 150 தலைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. சிறப்பு தபால் உறை
'கோவை பெக்ஸ் 2024' சிறப்பு தபால் உறை, பி.எஸ்.ஜி., சர்வஜனா மேல்நிலைப் பள்ளியின் சிறப்பு தபால் உறை மற்றும் மை ஸ்டாம்ப்; உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞருமான சலீம் அலியின் சிறப்பு தபால் உறை; 'வைப்ரன்ட் விங்ஸ் ஆப் கோவை' என்ற தலைப்பில் புகைப்பட தபால் அட்டை ஆகியவை வெளியிடப்பட்டன.பள்ளி குழந்தைகளுக்கான கடிதம் எழுதும் போட்டி, மாயா ஜால நிகழ்ச்சி, கடிதப் பரிமாற்றம் பயிலரங்கு அஞ்சல் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.தபால் தலை கண்காட்சியை முன்னிட்டு, கோவையில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கடிதம் எழுதும் போட்டியில், 3,000 பேர், ஓவியப் போட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர், நேற்று, கண்காட்சியில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றனர். 2,000 மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 10 ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கண்காட்சியில், 20 பள்ளிகளை சேர்ந்த 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தபால் தலை வரலாறு குறித்து குறிப்பெடுத்துக் கொண்டனர். தேசபற்று, தேசத்தின் பெருமை, வரலாறு பேசும் தபால் தலைகளை கண்டு மாணவர்கள் வியந்தனர்.மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சரவணன், தபால் துறை மேற்கு மண்டல இயக்குனர் அகில் நாயர், ஆனைக்கட்டி, சலீம் அலி பறவைகள் சரணாலய விஞ்ஞானி பிரமோத் பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இரண்டாவது நாளாக இன்றும் கண்காட்சி நடக்கிறது. இதில், சிறப்பான தலைப்புகளில் தபால் தலைகளை காட்சிப்படுத்தியவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.