நகராட்சியில் சரிவர எரியாத தெருவிளக்குகள்; கண்டறிந்து மாற்றியமைப்பது அவசியம்
பொள்ளாச்சி; நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், சரி வர தெரு விளக்குகள் எரியாததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும், இரவு நேரத்தில் மக்கள் பாதிப்படைகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், ஹைமாஸ், சோடியம், எல்.இ.டி., என, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகள், குறிப்பிட்ட துார இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில், சில பகுதிகளில் உள்ள விளக்குகள், வெளிச்சம் குறைவாகவும், செயல்படாத வகையிலும் உள்ளது.குறிப்பாக, தெப்பக்குளம் வீதி, மகாலிங்கபுரம் உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளிலும் இரவில் தெருவிளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. வேகமாக இயக்கப்படும் வாகனங்கள், திருப்பங்களில் விபத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.இதேபோல, கோட்டூர் ரோடு மேம்பாலத்தில், பல மாதங்களாக, சரிவர மின் விளக்குகள் எரியாத நிலையில், அவற்றை மாற்றியமைக்க, துறை ரீதியான அதிகரிகள் நடவடிக்கை எடுப்பதும் கிடையாது.மக்கள் கூறியதாவது: நகரின் மேம்பாட்டிற்கான தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை, முறையாக மேற்கொள்ள வேண்டும். பல்பு பழுது ஏற்படும் போது, உடனடியாக புதிய பல்பை மாற்ற வேண்டும்.இல்லையெனில், மின் விளக்குகள், இரவு நேரங்களில் ஒளிரும் வகையில், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும், தானியங்கி கருவி பொருத்த வேண்டும்.இதன் வாயிலாக, ஒவ்வொரு தெரு விளக்குகளும் எரிகிறதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும். அதேநேரம், நகராட்சி அதிகாரிகளின், ஆய்வும் அவ்வபோது அவசியமாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.