பலமாக வீசும் குளிர் காற்று கண்கள் பாதுகாப்பில் கவனம்
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், குளிர் காற்று பலமாக வீசுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகலில், வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன், அவ்வப்போது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது.காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, குளிர் காற்று, பலமாக வீசுகிறது. குறிப்பாக, நகரில், ரோட்டின் நடுவே சென்டர்மீடியன் பகுதியில், படிந்திருக்கும் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளின் கண்களை பதம் பார்க்கிறது. அதிகளவு காற்று வீசும் நேரங்களில், கண்களை பாதுகாப்பது குறித்த போதிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை.கண் டாக்டர்கள் கூறுகையில், 'கண் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கண்ணில் துாசி விழுந்தால், கசக்கக் கூடாது. லேசாக கண்களை திறந்து மூடினால், கண்ணில் உள்ள நீரில் முழ்கி அதுவே வெளியேறி விடும். உறுத்தல் அதிகமாக இருந்தால், சுத்தமான நீரில் கண்களை கழுவலாம். பலத்த காற்று வீசுவதால், பைக்கில் செல்பவர்கள், கண்ணாடி உடன் கூடிய ெஹல்மெட் அணிவது அவசியம். தொடர்ந்து எரிச்சல் இருந்தால் டாக்டர் ஆலோசனை பெற வேண்டும்,' என்றனர்.