மாணவர்கள் அடிக்கடி விடுப்பு; பள்ளி ஆசிரியர்கள் திணறல்
பொள்ளாச்சி; தொடர்ந்து பள்ளிக்கு வராமல் 'டிமிக்கி' கொடுக்கும் மாணவர்களை கண்டிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, 326 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இங்கு, காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு இருந்தும், சில பள்ளிகளில் பொருளாதாரம், உடல்நிலை போன்ற காரணங்களால் மாணவர்களின் தொடர் விடுப்பு, இடைநிற்றல் நிலைகள் தொடர்கிறது. அதிலும், சில மாணவர்கள், வாரத்தில் 2 நாட்கள் பள்ளிக்கு வந்தால், 3 நாட்கள் விடுப்பு எடுத்து விடுகின்றனர். இதனால், வகுப்பு ஆசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். பெற்றோர் வாயிலாக கல்வியின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் தீவிரம் காட்டுகின்றனர். தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிக்கு, தொடர்ந்து, 15 நாட்கள் மாணவர்கள் வரவில்லை என்றால் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து, மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையெனில், அவர்களின் பெயர், பள்ளியில் இருந்து நீக்கப்படும். இதனை அறிந்து கொண்ட மாணவர்கள், தொடர்ந்து விடுப்பு எடுப்பதைத் தவிர்த்து, வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களை அடிக்கவோ, கடிந்து கொள்ளவோ கூடாது, அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அரசின் உத்தரவால் அவர்களை கண்டிக்க முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில், பெற்றோர்களை வரவழைக்க முற்பட்டாலும், அதற்கும் ஒத்துழைப்பு இருப்பதில்லை. இவ்வாறு, கூறினர்.