உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனதாலும், உடலாலும் மாணவியர் வலிமை! அரசு பள்ளிகளில் கராத்தே பயிற்சி

மனதாலும், உடலாலும் மாணவியர் வலிமை! அரசு பள்ளிகளில் கராத்தே பயிற்சி

மேட்டுப்பாளையம்; அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவியர் உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை மிக்கவர்களாக மாறி வருகின்றனர். தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, காரமடை கல்வி வட்டாரத்தில், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

தன்னம்பிக்கை

காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:- காரமடை கல்வி வட்டாரத்தில் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என சுமார் 44 பள்ளிகள் உள்ளன. 8 மணி நேரம் வகுப்பு அடிப்படையில், வாரம் அல்லது மாதம் இருமுறை மாணவியருக்கு தற்காப்பு கலைகளை கற்று தருகிறோம். காரத்தே கற்கும் மாணவியருக்கு பள்ளி சார்பில் சத்துமிக்க சிற்றுண்டிகளும் தரப்படுகின்றன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் பயிற்சி பெறுகின்றனர். மாணவியரின் தன்னம்பிக்கை, உடல் வலிமை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் வாயிலாக, படிப்பிலும் கவனம் சிதறாமல் நன்கு படித்து வருகின்றனர். போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு, 'குட் டச், பேட் டச்' வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். மாணவியர் கூறுகையில், 'பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும், எங்களை நாங்களே தற்காத்துக் கொள்வதற்கும் இந்த கலைகள் மிகவும் உதவு கின்றன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை