தகுதி சான்றிதழ் பெற அலைக்கழிப்பு: மாற்றுத்திறனாளி மாணவர்கள் புகார்
சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ -- மாணவியர், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறப்பு ஒதுக்கீடு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கான, இணையவழி விண்ணப்பப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநில இடஒதுக்கீட்டு கொள்கையின்படி, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின், மண்டல மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகள் தகுதிச் சான்றை, 'ஆன்லைன்' வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த சான்றிதழைப் பெற, மண்டல மருத்துவ வாரியத்துக்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தையும் செய்து, தகுதி சான்றிதழ் வழங்காமல், ஒவ்வொரு பரிசோதனைக்கும், வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்படி கூறுவதால், சான்றிதழ் பெற முடியாமல், மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, மாற்றுத்திறனாளி மாணவர்கள் கூறியதாவது: மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டுமென்றால், சில பரிசோதனைகள் செய்ய, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, கே.கே.நகர் புனர்வாழ்வு மையத்துக்கு செல்லும்படி,மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியரை அலைக்கழித்து வருகின்றனர். மன உளைச்சல் அங்கே சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து, பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை, மீண்டும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு ஓரிரு நாட்கள் ஆவதால், அலைச்சல் மட்டுமின்றி, மன உளைச்சலும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலேயே, அனைத்து துறை டாக்டர்களையும் உள்ளடக்கிய, சிறப்பு முகாமை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.