தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மானிய திட்டம்
ஆனைமலை; 'தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மானிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,' என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது. தென்னையில் வெள்ளை ஈ பாதிப்பால், மகசூல் பாதித்துள்ளது. வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை:பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தென்னையில், கடந்த சில ஆண்டுகளாக பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் விளைச்சல் குறைந்து வருகிறது. மேலும், கடந்தாண்டு தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், பாதிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறையில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சள் நிற ஒட்டு பொறி, ஒட்டுண்ணி, விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய மானிய திட்டம் பெறப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், ஆதார் நகல், வங்கி பாஸ்புக் நகல், விவசாயிகள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2, உள்ளிட்ட ஆவணங்கள் கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.