கோடை வெப்பம்; கூல் ரூப் பெயின்ட் ஜில் சூழல் தரும்
சா லை விரிவாக்கம், புதிய கட்டடம் கட்டுதல் போன்ற கட்டுமான பணிகளுக்காக, ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. வாகனப் பயன்பாடும் மித மிஞ்சி இருப்பதாலும், ஏ.சி., போன்ற உபகரணங்கள், தொழிற்சாலைகளின் கார்பன் வெளியீடு போன்ற காரணங்களால் கோடை வெப்பம் உயர்ந்து கொண்டே செல்கிறது.கோடை வெப்பத்தால் நாம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். பகல் பொழுதில் நமது வீடுகளின் மேல் விழும் சூரிய வெப்பத்தால் கான்கிரீட் மேற்கூரை மற்றும் மேற்குப்புற சுவர் அதிகப்படியாக சூடேறி, பின்னர் இரவில் வெப்பத்தை வெளியேற்றுவதால் வீட்டிற்குள் உஷ்ணம் அதிகமாகி மிகவும் துன்பத்திற்கு ஆட்படுவதோடு வெப்பம் சம்பந்தமான நோய்களுக்கும் உள்ளாகிறோம்.கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:வெயில் பிரச்னையில் இருந்து தப்பிக்க கான்கிரீட் கூரை மீது போடப்படும் சுருக்கி தளமானது, நாள்பட பழுதாகி பயனற்று போகிறது. இன்றைய நாட்களில் கூல் ரூப் டைல்ஸ் எனப்படும் தரைக்கற்கள் சூரிய வெப்பத்திலிருந்து காப்பாற்றவும், வீட்டிற்குள் வெப்பத்தை குறைக்கவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.தற்பொழுது 'கூல் ரூப்' டைல்ஸ் விட குறைவான செலவில் அனைவரும் உபயோகிக்க தக்க வகையில் கூல் ரூப் பெயின்டிங் இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூல் ரூப் பெயின்ட் என்பது அனைத்து வகையான குறைகளிலும் பயன்படுத்தக்கூடிய உயர்ரக மற்றும் சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கக் கூடிய தன்மை கொண்டது.இது இந்திய பசுமை கட்டடங்களுக்கான அமைப்புகளின் தர நிலையின்படி சோதனை செய்யப்படுகிறது. இந்தப் பூச்சின் முக்கிய நோக்கமானது கூரை வெப்பநிலையை வெப்ப பிரதிபலிப்பின் மூலம் குறைப்பது. இதனைக் காப்பு பூச்சாக கான்கிரீட், அஸ்பெஸ்டாஸ் கூரை, ஜி.ஐ., மற்றும் தகர கூரைகளின் மேலும் உபயோகித்து வெப்பத் தடுப்பு ஏற்படுத்த முடியும். இந்தப் பூச்சு மூலம் மேற்கூரை வெப்பநிலையை, 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க உதவுவதோடு, நீர் உட்புகா பூச்சாகவும் அமைகிறது.கான்கிரீட் மேற்கூரை பகுதியை நன்றாக சுத்தம் செய்து, அதில் வெடிப்புகள் அல்லது சிறு துளைகள் இருப்பின் அவற்றை சிமென்ட் பூசி சரிசெய்து கூல் பிரைமர் அடித்து, அதன் மேல் இந்த பெயின்ட்டை அடித்து, சூரிய வெப்பத்தால் ஏற்படும் உஷ்ணத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.