உபரிநீரை குளம், குட்டைகளுக்கு வழங்கணும்! நீர்வளத்துறை அமைச்சருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
பொள்ளாச்சி; 'பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் வீணாகாமல் இருக்க குளம், குட்டைகளுக்கு வழங்க வேண்டும்,' என, நீர்வளத்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி அருகே, கோதவாடி, தேவம்பாடி குளங்களுக்கு மழை பெய்யும் காலங்களில் உபரிநீர், வரத்து கால்வாய்கள் வாயிலாக திறக்கப்பட்டு நிரப்பப்படும்.குளங்களில் நீர் தேக்கப்படும் போது, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர். இந்தாண்டும் பருவமழை நன்றாக பெய்து கொண்டிருப்பதால், பி.ஏ.பி., பாசன திட்டத்துக்கு உட்பட்ட அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. கனமழை பெய்வதால் தேவம்பாடி குளம் நிறைந்து, தண்ணீர் கேரளா மாநிலம் நோக்கி செல்கிறது. அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் வீணாக அரபிக்கடல் நோக்கி செல்லும் நிலை உள்ளது. எனவே, திருமூர்த்தி அணையிலிருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு மெயின் கால்வாயில் திறக்கப்படும் நீரின் வாயிலாக, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகாவில் உள்ள குளங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். கோதவாடி குளம் நிரம்பாததால் திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டலத்துக்கு திறக்கப்படும் நீரை, கால்வாய் வாயிலாக கோதவாடி குளத்துக்கு வரும் வழியில் உள்ள, 20 தடுப்பணைகளையும் நிரப்பலாம். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, ஆறு மாதங்களுக்கு தண்ணீர் பிரச்னை இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறலாம். பி.ஏ.பி., திட்டத்தில் கடைக்கோடி பகுதிகளான பல்லடம், பொங்கலுார், காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் நடைபெற உள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கும்போதுமான தண்ணீர் அளித்து அப்பகுதி மக்களின் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.