தகவல் கிடைத்ததும் செயலில் இறங்க கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
கோவை; கோவை நகர் பகுதியில் கன மழை பெய்யாவிட்டாலும், புறநகர் பகுதியில் பரவலாக காணப்படுகிறது; வால்பாறை மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் கிராந்திகுமார், நேற்று ஆய்வு செய்தார். அவிநாசி ரோடு மேம்பால சுரங்கப்பாதையில், தண்ணீர் தேங்காத அளவுக்கு கூடுதலாக மோட்டார்கள் பொருத்தி இருப்பது, லங்கா கார்னரில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோட, ரோட்டுக்கு கீழ் கான்கிரீட் பாக்ஸ் அமைத்திருப்பது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கினார். அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடந்தது. இதன்பின், கிராந்திகுமார் கூறுகையில், ''மழை பாதிப்பு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரணப் பொருட்கள் உடனடியாக வழங்க வேண்டும்; தேவையான பொருட்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். எங்கேயாவது மழை நீர் தேங்கியிருந்தால், நோய் தொற்று பரவாமல் இருக்க மருத்துவ முகாம் நடத்த வேண்டும். குடிநீரில் சரியான விகிதத்தில் குளோரின் கலந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், பேரிடர் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.