சூர்யகர் பயனாளிகள் இலக்கு 25 லட்சம்; எட்டியது 21 ஆயிரம்!
கோவை: பிரதமரின் சூர்யகர் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக மின்வாரியம் போதுமான ஆர்வம் காட்டாததால், ஓராண்டுக்குள் 25 லட்சம் பயனாளிகளை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை வெறும், 21 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.சோலார், காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு, மாநில அரசுகளை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீடுதோறும் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்க, 'பி.எம்., சூர்ய கர் முப்தி பிஜிலி யோஜனா' திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.இதன்படி, ஒரு கிலோவாட் திறனுடைய சோலார் மின் உற்பத்தி உபகரணத்தை நிறுவ, ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட்டுக்கு ரூ.78 ஆயிரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்தது.மாதம் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் ஒரு கிலோவாட் திறனுள்ள சோலார் மின் உற்பத்தி உபகரணம் தேவைப்படும். 300 யூனிட் உபயோகிப்பவர்கள், 2 முதல் 3 கிலோவாட் திறன், அதற்கு மேல் உபயோகிப்பவர் 3 கிலோவாட்டுக்கும் கூடுதல் திறனுடைய சோலார் மின் உற்பத்தி உபகரணம் தேவைப்படும்.இத்திட்டத்தில், தமிழகத்தில் ஓராண்டுக்குள் 25 லட்சம் பயனாளிகளை இணைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக தமிழக மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், கடந்த டிச., வரை, 21,175 பேரே இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். சூர்யகர் திட்டம் குறித்து, தமிழக மின்வாரியம், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
எங்கு குறைவு...அதிகம்?
இந்திய அளவில் இத்திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குஜராத்தில்தான் அதிகம். குஜராத்தில் 3.28 லட்சம் பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் 1.39 லட்சம், உ.பி., 56 ஆயிரம், கேரளா 55 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சிறிய மாநிலமான கேரளத்தில் பயனடைந்தவர்களில் பாதியளவு கூட தமிழகத்தில் பயனடையவில்லை. நாடு முழுக்க மொத்த பயனாளிகளில் 3 சதவீதத்தினரே தமிழகத்தில் பயனடைந்துள்ளனர்.