உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுங்க! பா.ஜ., மனு கொடுத்து வலியுறுத்தல்

மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுங்க! பா.ஜ., மனு கொடுத்து வலியுறுத்தல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் அனுமதியின்றி பசுமையான மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பா.ஜ.,வினர், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில உள்ள வளர்ந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த, ஏ.எஸ்.டி.,புரம், தாகூர் வீதி, திருவள்ளுவர் வீதி, எல்.ஐ.ஜி., காலனி ஆகிய ரவுண்டானாவை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்த பசுமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவரின் சுய தேவைக்காக மரம் வெட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.பசுமையான மரங்களை வெட்டுவது தவறான செயலாகும். பட்டுப்போன மரங்களை மட்டும் வெட்டலாம். இது குறித்து விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்தும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிப்பிடம் தேவை

சிங்காநல்லுார் மா.கம்யூ., கட்சி செயலாளர் பட்டீஸ்வர மூர்த்தி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம், சிங்காநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் சந்திப்பு பகுதியில் ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இவர்கள் குடியிருக்கும் வீடுகளின் பரப்பளவு மிகவும் குறைவாக உள்ளதால், வீடுகளில் தனி கழிப்பிடம் கட்டுவதற்கான இடவசதி ஏற்படுத்தவில்லை. எனவே, அங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொது கழிப்பிடம் கட்ட வேண்டும். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.சிங்காநல்லுார் கிராமத்தின் பஸ் ஸ்டாப்பில் இருந்து, பாலாறு பாலம் வரை வீதியின் மேல்புறத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற கால்வாய் கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கியுள்ளதால் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதனால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ