தமிழ், தமிழரின் நலனுக்காகஅர்ப்பணித்துக் கொண்ட டி.வி.ஆர்.,
டி.வி.ஆர்., என்று அன்பாக அழைக்கப்படும் டி.வி.ராமசுப்பையர் அவர்கள், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் 'தினமலர்' நாளிதழின் நிறுவனர் ஆவார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த, தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் (தற்போது கன்னியாகுமரி மாவட்டம்) வசித்து வந்த ராமலிங்க ஐயர் மற்றும் பகவதி தம்பதிக்கு, 1908ம் ஆண்டு, அக்., 2ம் தேதி ராமசுப்பையர் பிறந்தார்.அவர், சமூகத்தில் நலிந்த வகுப்பினர் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மற்றும் மேம்பாட்டிற்காக பணியாற்றினார். 'தினமலர்' நாளிதழின் முதல் பதிப்பு, 1951 செப்., 6ம் தேதி திருவனந்தபுரத்தில் அச்சிடப்பட்டது.குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். அதற்கான போராட்டத்தில் தமிழர்களின் குரலாக தனது நாளிதழை ஒலிக்கச் செய்தார். தொடர் போராட்டத்தின் விளைவாக, 1956ம் ஆண்டு, குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.அவரது கடின உழைப்பு, துல்லியமான திட்டமிடல், உள்நாட்டு பொருளாதார ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை, தமிழகத்தில் 'தினமலர்' நாளிதழின் புகழ் அதிகரிக்க உதவியது. தமிழ்நாடு உருவாக்கப்பட்டவுடன், 1957ம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் இருந்து வெளியிடப்பட்ட பதிப்பை, தமிழகத்தின் திருநெல்வேலிக்கு மாற்றினார்.தமிழ், தமிழரின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட டி.வி.ராமசுப்பையர் அவர்கள், 1984ம் ஆண்டு மறைந்தார். 'தினமலர்' நாளிதழ் பல ஆண்டுகளாக தமிழக மக்களின் குரலாக இருந்து வருகிறது. இவரை கவுரவிக்கும் விதமாக, 2008ம் ஆண்டு, இந்திய அஞ்சல் துறை, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது.(நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்).