மேலும் செய்திகள்
மதுரை கல்லுாரியில் கருத்தரங்கம்
31-Aug-2025
கோவை; மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் வேளாண் பல்கலை சார்பில், 'பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும், நவீன தொழில்நுட்ப உலகமும்' என்ற தலைப்பில், அறிவியல் தமிழ் தேசிய கருத்தரங்கு, வேளாண் பல்கலையில் நடந்தது. உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா வரவேற்றார். வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தார். தமிழை பாதுகாப்பது கடமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கட்டுரை தொகுப்பு நுால்களை வெளியிட்டு பேசுகையில், ''செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டம் வாயிலாக, ஆட்சி சொல்லதிகாரம் உருவாக்கப்பட்டு, புதிய கலைச்சொற்களுக்கு அடித்தளம் உருவாக்கப்பட்டது. புதிய கலைச்சொல் உருவாக்கம் என்பது, தமிழ் மொழிக்கு அவசியமானது. தாய்மொழியை பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். பிற மொழிகளை கற்றுக்கொள்ளும் அதே வேளையில், தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்க வேண்டியது, நாளைய தலைமுறையின் முதற்கடமை,'' என்றார். புதிய கலைச்சொற்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''கலைச்சொற்கள் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், கருத்துப் பரிமாற்றத்துக்கும் முக்கியம். புதிய தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் வாயிலாக, பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன தொழில்நுட்ப உலகுக்கும் பயனுள்ள கலைச்சொற்களைத் தருகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பல புதிய கலைச்சொற்கள் உருவெடுத்துள்ளன. புதிய தமிழ் சொற்கள் தமிழுக்கு வரும்போது தமிழ் என்றும் உயிர்ப்போடு இருக்கும். துறைசார்ந்த கருத்துகளைச் சுருக்கமாக, தெளிவாக பரிமாறிக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் கலைச்சொற்கள் உதவுகின்றன,'' என்றார். பழந்தமிழ் இலக்கியத்தில் ஆட்சி சொற்கள், தமிழ் இலக்கியங்களில் வேளாண் கலைச்சொற்கள் என்பன உட்பட,பல்வேறு தலைப்புகள் கருத்தரங்கில் பேசப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வை அருள், வேளாண் பல்கலை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
31-Aug-2025