மழையால் சேதமடைந்த தார் சாலை ; சீரமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக சாலைகளை செப்பனிட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம், 147.78 கி.மீ., துாரத்திற்கு சாலைகள் உள்ளன. அதன்படி, நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகிறது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக பெய்த மழையின் காரணமாக, நகராட்சியில் பராமரிக்கப்படும் சாலைகள் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறி விட்டன. அதிலும், தெப்பக்குளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு என, அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. கற்கள் நிறைந்த ரோட்டில் வாகனங்கள் அனைத்துமே ஊர்ந்து செல்கின்றன. டூ வீலரில் செல்வோர், கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும் அதிகரிக்கிறது. மேலும், இந்த சாலைகளை கடக்க நீண்ட நேரம் ஆவதால், வாகன ஓட்டுநர்கள் செய்வதறியாது திணறுகின்றனர். மக்கள் கூறியதாவது: வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறுவதால் அடிக்கடி பழுதாகின்றன. கவனமின்றி வாகனத்தை இயக்குவோரால் விபத்தும் ஏற்படுகிறது. சாலை மோசமாக உள்ளதால், திடீரென நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. சாலைகளில் அவ்வப்போது 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டாலும், மழைக்கு தாக்குப்பிடிப்பதில்லை. மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.