எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டுக்கு தார் சாலை, மழைநீர் தடுப்பு வியாபாரிகள் அப்பாடா
கோவை; எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் மழைநீர் குளம் போல் தேங்காமலிருக்க 1,100 அடி துாரத்துக்கு தரை தளத்தை உயர்த்தி, தார்சாலை அமைக்கவும், மழைநீர் மார்க்கெட்டினுள் நுழையாமலிருக்கவும் போதுமான தடுப்பும் ஏற்படுத்தப்படும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்.கோவை மேட்டுப்பாளையம் சாலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு அருகே 3.5 ஏக்கர் பரப்பளவில் எம்.ஜி.ஆர்., மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 180 கடைகள் உள்ளன.இரு நாட்களுக்கு முன் பெய்த மழையால், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த காய்கறி தண்ணீரில் மூழ்கி நாசமானது. இது பற்றி, நேற்றைய நமது நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாநகராட்சி அதிகாரிகளை நேற்று கள ஆய்வு மேற்கொள்ளவும், பணிகளை உடனடியாக துவக்கவும் அறிவுறுத்தினார்.அதனடிப்படையில், மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு கள ஆய்வு மேற்கொண்டனர். சேறும், சகதியுமாக இருக்கும் 1 முதல் 60 எண் கொண்ட கடைகள் அனைத்தையும், தற்காலிகமாக காலி செய்து, மார்க்கெட்டிற்கு மேற்குப்பகுதிக்கு இடமாற்ற அறிவுறுத்தியது.பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் அவர், அவர்கள் கடைகளில் வியாபாரத்தை துவக்கலாம். மார்க்கெட்டில் கடைகள் அமைந்துள்ள, 1,100 அடி துாரத்துக்கு தரைதளம் சாலை மட்டத்துக்கு உயர்த்தப்படும்.அதன் மேற்பகுதியில் தார்சாலை அமைத்து, மழைநீர் உள்ளே நுழையாமல் தடுக்க தடுப்பு ஏற்படுத்தப்படும். மார்க்கெட்டினுள் தேங்கும் மழைநீர் வெளியேற, மழைநீர் வடிகால் ஏற்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் துரை முருகன் கூறுகையில், ''இன்று(நேற்று) மாநகராட்சி பொறியாளர்கள் மார்க்கெட்டை ஆய்வு செய்துள்ளனர். அங்கு தண்ணீர் தேங்காத வகையில், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உடனடியாக ஏற்படுத்தப்படவுள்ளது. ''இதற்கான நிதியை ஒதுக்குவதாக, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்,'' என்றார்.