டாஸ்மாக் கடைகளை இடமாற்ற வேண்டும்; முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இந்த பஸ் ஸ்டாண்டு பாதையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே பஸ் ஸ்டாண்டின் இரண்டு நுழைவு பகுதிகளின் அருகில் அதாவது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஊட்டி சாலை, அண்ணா ஜீ ராவ்ரோடு சாலைகளில் மூன்று டாஸ்மாக்குகளும், இரண்டு பார்களும் உள்ளன. இதில், மது அருந்திவிட்டு மது பிரியர்கள் அடிக்கடி சாலைகளில் நின்று தகாத வார்த்தைகளில் பேசி, தங்களுக்குள் தாக்குதல் நடத்திக் கொள்கின்றனர். இந்த வழியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய நோயாளிகளும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்களாக இப்பகுதிகள் உள்ளது. பஸ் ஸ்டாண்டு உள்ளே வந்து அவ்வழியாக செல்லும் மக்களையும் மதுபிரியர்கள் வம்புக்கு இழுக்கின்றனர்.எனவே இந்த டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் பொதுமக்களும், போக்குவரத்தும் குறைவாக உள்ள பகுதிகளில் இடம் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.