பொள்ளாச்சியில் வரி ஏய்ப்பு செய்வோர் தப்ப முடியாது! முறைப்படுத்த நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், வரி ஏய்ப்பு செய்வதைக்கண்டறிந்து முறைப்படுத்த, அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வரியை முறைப்படுத்த, 'கிடுக்கிப்பிடி' போடுவதால், வரி ஏய்ப்பு செய்வோர் 'கிலி' அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டுக்கு, ரூ.33.77 கோடி வருவாய் வர வேண்டியுள்ளது.இந்த வருவாயைக்கொண்டு தான், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்,நகராட்சி ஊழியர்கள், துாய்மைப்பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஈடு செய்யப்படுகின்றன. தற்போது, வரி வசூலில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதில், பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும்,குடியிருப்பு வரி செலுத்திக்கொண்டு வணிக செயல்பாடுகள் செய்து கொண்டும், பெரிய கட்டடங்கள் இருந்த போதிலும், குறைந்த அளவே வரி செலுத்தியும், சிலர் நகராட்சிக்கு தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும், தாங்களாகவே முன்வந்து, முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள,கால அவகாசம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், நகராட்சியில் வரி ஏய்ப்பு செய்தவர்களை கண்டறிய, கள ஆய்வுப்பணியில் நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் வருவாய்ப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை
நகராட்சி கமிஷனர் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், 4,384 கட்டடங்கள் உள்ளன. அதில், வரி முறையாக செலுத்தப்படுகிறதா என்றும், வரி முறைப்படுத்தவும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், நகரில் உள்ள கட்டடங்களின் ஜி.எஸ்.டி., மற்றும் மின்கட்டணம் குறித்த பட்டியல் உள்ளது. அதைக்கொண்டு வீட்டு வரி செலுத்தி வணிக பயன்பாட்டுக்கு கட்டடம் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.அதில், இதுவரை, 124 கட்டடங்கள் கண்டறியப்பட்டன. அவை குறைந்த வரி செலுத்தி, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. அதில், 94 கட்டடங்கள் இதுவரை மொத்தம், 2,23,694 ரூபாய் மட்டுமே வரி செலுத்தியுள்ளனர்.தற்போது வரி முறைப்படுத்தியதால், 10 லட்சத்து, 36,435 ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான வித்தியாசம், 8 லட்சத்து, 12 ஆயிரத்து, 739 ரூபாயாகும்.இதுபோன்று, 21 கட்டடங்கள், வீட்டுக்கான வரியை செலுத்தி வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்த கட்டடங்கள் வரியாக, 52,970 ரூபாய் மட்டுமே செலுத்தி வந்தன.தற்போது, வரி முறைப்படுத்தப்பட்டு, 2,33,100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வித்தியாசம், ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 130 ரூபாயாகும்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கள ஆய்வு செய்து வரிமுறைப்படுத்தப்படுகிறது.வீடு என ஏமாற்றினால், ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இது வணிக பயன்பாடு இல்லை என தகவல் கொடுத்தால், ஜி.எஸ்.டி., ரத்தாகிவிடும். மீண்டும் வீண் அலைச்சல் தான் ஏற்படும்.எனவே, வரி ஏய்ப்பு செய்பவர்கள் உடனடியாக அவர்களே முன்வந்து, வரியை முறைப்படுத்தி செலுத்த வேண்டும். ஏற்கனவே இருமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரி முறைப்படுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.