அதிகரிக்குது ஆசிரியர் காலி பணியிடம்: அதள பாதாளத்துக்கு போகிறது கல்வித்தரம்
கோவை: தமிழகத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நீண்டநாளாக நிரப்பப்படாததால், மாணவர்களின் அடிப்படை கற்றல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2012ல் நடந்த தகுதித் தேர்வின் அடிப்படையில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 20,711 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதன் பிறகு 2013, 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் தகுதித் தேர்வு மட்டும் நடத்தப்பட்ட நிலையில், பணி நியமனங்கள் வழங்கப்படவில்லை. 2024ல் நடந்த நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,457 பேருக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 20,000 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதோடு, அடுத்த கட்ட வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் கல்வியின் தரமும் கேள்விக்குறியாகியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். வஞ்சிக்கிறது அரசு இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பார்த்திபன் கூறியதாவது: 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையின் 177வது வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 110 விதியின் கீழ் 19,260 பணியிடங்கள் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், தகுதி மற்றும் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெறாத 10,700 இடைநிலை ஆசிரியர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மூன்று லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தின்படி பார்த்தால் கூட, 11,000 புதிய ஆசிரியர்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால் நியமிக்கவில்லை. காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, பல்வேறு அறவழிப் போராட்டங்கள் என தொடர்ந்து முயற்சித்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.