ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வழிகாட்டியாகும் ஆசிரியர்கள்; இன்று ஆசிரியர் தினம்
கோவை: ஒவ்வொருவருக்கும் இரண் டாவது பெற்றோர் ஆசிரியர்களே. அறிவுக் கண் திறக்க வைக்கும் ஆசான்கள், நமக்கான ஒவ்வொரு நிலையிலும் நினைவுக்கு வரக்கூடியவர்கள். இன்று ஆசிரியர் தினம். மாணவர்களின் இலக்கை சொல்லிக் கொடுப்பதும், அதன் வழியே நடக்க வைப்பதும் இவர்கள் மேற்கொண்டிருக்கும் முக்கியமான பணி. அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், 2023ல் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவருமான கண்ணன் கூறியதாவது: நல்ல ஆசிரியரால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவன். புரிதலோடும், அன்போடும் பாடம் நடத்தினால், கண்டிப்பான ஆசிரியர்களாக இருந்தாலும், எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள். ஒவ்வொரு வெற்றியாளருக்கும், ஒரு ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பார். தற்காலத்தில் ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஆசிரியர்கள் - மாணவர்கள் உறவு நல்லபடியாகவே இருக்கிறது. ஆசிரியர்களின் பாராட்டு, மாணவனின் இலக்கு நோக்கிய பயணத்துக்கு வழிகாட்டியாக இருக்கும். ஆசிரியர்கள், ஒவ்வொரு நாளும் தகுந்த தயாரிப்புகளோடு பாடம் நடத்துவது, மாணவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்க ஏதுவாக இருக்கும். பாடங்களை நடத்தும் திறன் வாயிலாக, மாணவர்களை தன்வசப்படுத்த முடியும். இவ்வாறு, கூறினார்.