உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்கன்வாடிகளில் 30 சதவீத காலி பணியிடங்களால் கற்பித்தல் பணி பாதிப்பு! வேலைப்பளு காரணத்தால் பணியாளர்கள் தவிப்பு

அங்கன்வாடிகளில் 30 சதவீத காலி பணியிடங்களால் கற்பித்தல் பணி பாதிப்பு! வேலைப்பளு காரணத்தால் பணியாளர்கள் தவிப்பு

அன்னுார்: கோவை புறநகரில் 30 சதவீதம் காலிப்பணியிடங்களால் ஏற்பட்ட, வேலைப்பளுவால், குழந்தைகளுக்கு கற்பிக்க முடியாமல் அங்கன்வாடி பணியாளர்கள் தவிக்கின்றனர். தமிழக அரசின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கோவை புறநகரில், அன்னுார், பெரியநாயக்கன் பாளையம், எஸ்.எஸ். குளம், காரமடை, சூலூர் ஒன்றியங்களில் 500க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் கற்று வருகின்றன.

புகார்

இந்த மையங்களில் இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. திங்கள், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. செவ்வாயன்று சுண்டலும், வெள்ளியன்று வேக வைத்த உருளைக்கிழங்கும் வழங்கப்படுகிறது.இத்துடன் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது : அன்னுார் ஒன்றியத்தில் 108 அங்கன்வாடி மையங்கள் இருந்தன. இவை இணைக்கப்பட்டதன் வாயிலாக தற்போது 100 மையங்களாக குறைந்து விட்டன. அதிலும், 40 மையங்களில் கற்பிக்க வேண்டிய பணியாளர் பணியிடம் நான்கு ஆண்டுகளாக காலியாக உள்ளது. 30 மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சமைத்து தரும் உதவியாளர் பணியிடம் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளது.இதனால் ஒவ்வொரு அங்கன்வாடி பணியாளரும், இரண்டு அல்லது மூன்று மையங்களை கவனிக்க வேண்டியுள்ளது. உதவியாளர் இரண்டு மையங்களில் சென்று சமைக்க வேண்டி உள்ளது. சில மையங்களில் கற்பிக்க வேண்டிய அங்கன்வாடி பணியாளர், சமையல் வேலை செய்வதால் குழந்தைகளுக்கு கற்பிக்க முடிவதில்லை. குழந்தைகளுக்கு பாட புத்தகத்தை கொடுத்து கண்காணிக்க முடிவதில்லை. எந்தவித கற்பித்தல் பணியும் நடப்பதில்லை.இத்துடன் தினமும் குழந்தைகளுக்கு எடை பார்த்தல், வட்டார அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல் ஆகிய பணிகள் உள்ளன.

வேலைப்பளு

காலிப் பணியிடங்களால் மிக அதிக வேலைப்பளு உள்ளது. இதனால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சரிவர கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இதை பார்த்து, பொது மக்கள் சிலர் அங்கன்வாடி மையங்களுக்கு, பதில் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். அரசு உடனடியாக அன்னுார் வட்டாரத்தில் 70 காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அப்போதுதான் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவுடன் கற்பித்தலும் முறையாக நடைபெறும்.இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்க நிர்வாகி தாமோதரன் கூறுகையில், கோவை புறநகரில் உள்ள ஐந்து ஒன்றியங்களில் 30 சதவீதம் மையங்களில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தி உள்ளோம். சென்னையில் தலைமைச் செயலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். எனினும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை