விவசாயத்திலும் தொழில்நுட்ப புரட்சி; இஸ்ரோ விஞ்ஞானி பேச்சு
கோவை : பண்ணாரி அம்மன் வித்ய நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு, 'வானையும் அளப்போம்' என்னும் கருத்தரங்கு, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின் கலையரங்கில் நடந்தது.இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், '' தொழில்நுட்ப வளர்ச்சியில் கிட்டத்தட்ட வளர்ந்த நாடு, என்கிற அளவிற்கு நாம் உயர்ந்துள்ளோம். விவசாயத்தை இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து, விவசாயிகளுக்குப் பயனளிக்கும் முறையில் மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை எட்ட மாணவர்கள் முனைய வேண்டும். ஏனைய துறைகளில் கண்டுள்ள தொழில் புரட்சியை, நமது விவசாயத் துறையிலும் காண வேண்டும்,'' என்றார்.விண்வெளித் துறை பற்றி மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேள்வியாக எழுப்ப, அறிவார்ந்த பதில்களை வழங்கினார். நிகழ்வில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.