ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு பத்து ரூபாய் : வெள்ளமடை ஊராட்சி அதிரடி
பெ.நா.பாளையம்: பொதுமக்கள் கொண்டுவரும் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், பத்து ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளப்படும் என, வெள்ளமடை ஊராட்சி அறிவித்துள்ளது.பெரியநாயக்கன்பாளையம் அருகே எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளமடை ஊராட்சியில் சாமநாயக்கன்பாளையம், காளி பாளையம், வெள்ளமடை, செட்டிபாளையம் பகுதிகளில் வெள்ளமடை ஊராட்சி சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில், நமது ஊராட்சியின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு நெகிழி இல்லா கிராமமாக மாற்றுவதன், முன்னோட்டமாக நெகிழி கழிவுகள் பெறப்படுகின்றன. சுகாதார பங்கெடுப்பு நோக்கில், நெகிழிகளை கொண்டு வரும் நபர்களுக்கு, ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் சன்மானம் வழங்கப்படும். நெகிழிகள், வெள்ளமடை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தினசரி காலை, 10.00 மணி முதல் மாலை, 5.00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் என, அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இது வெறும் கண்துடைப்பு அறிவிப்பாக மட்டுமே உள்ளது. பொதுமக்களால் பிளாஸ்டிக் கழிவுகளை கிராமங்களில் இருந்து எடுத்துக்கொண்டு வெள்ளமடை ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல முடியாது. இதற்கு பதிலாக கிராமங்கள் தோறும் செல்லும் ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம், பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைத்து விட்டு, பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிப்பு செய்யலாம்.ஒரு சில கடைகளில் மட்டுமே அரசு விதிமுறைக்கு உட்பட்டு பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலான பிராண்டட் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்கின்றன. இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. இத்திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.இவ்வாறு, சமூக ஆர்வலர்கள் கூறினர்.