உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தைப்பூச திருவிழா: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

தைப்பூச திருவிழா: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னுார் அருகே சாலையூரில், குன்றின் மேல் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவிலில், நேற்று அதிகாலை விநாயகர் வழிபாடுடன் தைப்பூச விழா துவங்கியது. அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.மதியம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கோவில் வளாகத்தில் காவடிகளை சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். சிலர் மடிசோறு எடுத்தனர். பஜனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர் அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் முருகன் சன்னதியில் முருகப்பெருமானுக்கு 16 திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. மதியம் அலங்கார பூஜை நடந்தது. ஆயிமாபுதூரில் பழனி பாதயாத்திரை குழுவினர் தைப்பூசத்தை முன்னிட்டு 42வது ஆண்டாக நேற்று அதிகாலை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவில், குன்னத்துார் புதுார் பழனி ஆண்டவர் கோவில், குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். * பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள ஜோதி பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி நேற்று ஜோதிபாலமுருகன் சிறப்பு மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதே போல வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம், வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. இப்பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பலர் காவடி ஏந்தி மருதமலை மற்றும் குருந்தமலை முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை சென்றனர்.* தைப்பூசத்தை ஒட்டி, சூலுார் வட்டார கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவில், சூலுார் பழனியாண்டவர் கோவில், சூலுார் சிவாலயத்தில் உள்ள செந்தில் ஆண்டவர் கோவில், கண்ணம் பாளையம் பழனி ஆண்டவர் கோவில், காங்கயம்பாளையம் சென்னி யாண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவில், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் நடந்த தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ