அது நாற முகம்... இது வேற முகம்!
திருப்புவனம், சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள், நடந்து கொண்டே தான் உள்ளன. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த போலீஸ் எண்ணிக்கையில், ஒரு சிலர் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவதால், ஒட்டுமொத்த காவல் துறைக்கும், கெட்ட பெயர் வருகிறது.திருப்புவனம் சம்பவத்துக்கு பிறகு, போலீசாருக்கு எதிரான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. தவறு செய்யும் போலீசாரை, தட்டி கேட்கும் உரிமை குடிமக்களுக்கு உள்ளது. ஆனால் போலீசார் தங்கள் கடமையை செய்ய விடாதவாறு, சமூக வலைதளங்கள் திசை மாற்றுவதாக, நேர்மையான போலீசார் புலம்புகின்றனர். இது, அவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஏ.ஐ.,தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அதில் போலீசார், இரவு பகல் பாராமல் பணியாற்றுவது, முதியவர்களுக்கு உதவுவது, பேரிடர் நேரங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றுவது, உள்ளிட்ட காட்சிகள் இடம் பிடித்துள்ளன. இந்த வீடியோவை போலீசார் பலரும், வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.காக்கி சட்டைக்குள் இருப்பதும் மனிதன் தான் என்பதை மக்களும், காக்கி சட்டை போட்டாலும் நாம் மனிதன் தான் என்பதை, போலீசாரும் உணர்ந்து செயல்பட்டால், பொது மக்கள் - போலீஸ் இடையே நல்லுறவு நிலைக்கும்.