மாற்றுத்திறனாளிகள் அசத்திய வீல்ஸ் மாரத்தான் போட்டி
கவுண்டம்பாளையம்: 6வது ஆண்டாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற வீல்ஸ் மராத்தான் போட்டி, கவுண்டம்பாளையத்தில் நடந்தது. சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற் றும் முதுகு தண்டுவட காயத்தால் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவர்களின் அசாதாரண திறன்கள் மற்றும் வலிமையை கவுரவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சி சிற்றுளி அறக்கட்டளை, கங்கா மருத்துவமனை மற்றும் கங்கா முதுகெலும்பு காயம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. போட்டியானது, 5 கி.மீ., 3 கி.மீ., மற்றும் ஒரு கி.மீ., என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், 850 பேர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள், 150 பேர் என, மொத்தம் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அனைத்து பிரிவுகளிலும், மற்றவர்களுடன் சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் தலைவர் சவுந்தரராஜன் மற்றும் கங்கா மருத்துவமனை எலும்பியல் துறை தலைவர் டாக்டர் ராஜசேகரன் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில், கங்கா மருத்துவமனை இயக்குனர் ராமராஜசேகரன், சிற்றுளி அறக்கட்டளை நிர்வாகி குணா, சொர்க்க அறக்கட் டளை நிர்வாகி குரு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.