உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் பதுங்கியுள்ள வங்கதேசத்தவரை ஈசியா பிடிச்சுறலாம்! தொழிலாளர் நலத்துறை மனசு வைக்கணும்

கோவையில் பதுங்கியுள்ள வங்கதேசத்தவரை ஈசியா பிடிச்சுறலாம்! தொழிலாளர் நலத்துறை மனசு வைக்கணும்

கோவை : வங்கதேசத்தினர் கோவையில் பதுங்குவதை தடுக்க போலீசார், தொழிலாளர் நலத்துறை இடையே ஒருங்கிணைப்பு அவசியம். இரு துறையினரும் இணைந்து, தகவல்களை பகிர்ந்து பணியாற்றாவிட்டால், வங்கதேசத்தவரை கண்டுபிடிப்பது சிரமம்தான்.வட மாநில தொழிலாளர்கள் போர்வையில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஊடுருவுகின்றனர்.கடந்த, 10ம் தேதி துடியலுாரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர், வீரியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில், சட்ட விரோதமாக தங்கியிருந்த 13 பேர் என மொத்தம், 15 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், கரூரிலும் வங்கதேசத்தினர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகளில், வங்கதேசத்தினர் குறித்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.தொழில் நிறுவனங்களில், பணியில் சேரும் போது, அவர்களின் விபரங்கள் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்யப்படுகின்றன. அந்த விபரங்களை சரிபார்த்தால், ஆவணங்களின் உண்மை தன்மை தெரியும்.

கண்டறிய உதவணும்

ஆனால், இந்நடைமுறை முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், அந்நடைமுறையை மேற்கொள்ள, தங்களுக்கு அனுமதி கொடுத்தால் வங்கதேசத்தவர்களை கண்டறிய முடியும் எனவும், போலீசார் தெரிவிக்கின்றனர். பெயர் வெளியிட விரும்பாத, கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வடமாநிலத்தவர் போல், உருவ ஒற்றுமையுடன் இருக்கும் வங்கதேசத்தினரை கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கோவையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், மளிகைக்கடைகள், துணிக்கடைகளிலும் வடமாநிலத்தவர் பணிபுரிகின்றனர்.ஒவ்வொரு நிறுவனமாக சென்று ஆய்வு செய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நாங்கள் ஒவ்வொரு தகவலையும், தொழிலாளர் நலத்துறையினரிடம் பெற்று, அதை சோதித்த பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த தகவல்களை, தொழிலாளர் நலத்துறையில் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்கின்றன. ஆவணங்கள் இணைக்கப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் நடைமுறை உள்ளது. அதில் பதியப்படும் தகவல்களை, நாங்கள் ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை அனுமதித்தால், வங்கதேசத்தினரை எளிதில் கண்டறிந்து விடலாம். தொழிலாளர் நலத்துறைக்கு இதுகுறித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

வாயிலாக ஆதார்

வடமாநிலத்தவர் போர்வையில், கோவைக்கு வரும் வங்கதேசத்தினர், முதலில் போலியாக பான்கார்டு பெற்று விடுகின்றனர். அதைக் கொண்டு, ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்று விடும் இவர்கள், அசல் ஆதார் கார்டை பயன்படுத்தி, மீண்டும் அசல் பான்கார்டையும் வாங்கி விடுகின்றனர். அதன் வாயிலாக, வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட இதர நடவடிக்கைகள் எளிதாகி விடுகின்றன.கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரிடம் இருந்து, வங்கதேச அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அனைத்து ஆவணங்களிலும், 'பயோமெட்ரிக்' எனும் கைரேகை முறையை செயல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற போலி ஆவணங்கள் தயாரிப்பதை தடுக்க முடியும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ