சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்தது சீரமைக்கும் பணியில் வாரியம் தீவிரம்
கோவை,: கோவை, பேரூர் அருகே காளம்பாளையத்தில் சிறுவாணி குழாய் உடைந்ததால், குடிநீர் பொங்கி, ரோட்டில் ஓடியது. உடைப்பை சரி செய்யும் பணியில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை பகுதியில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 13 மி.மீ., அடிவாரத்தில் 6 மி.மீ., மழை பதிவானது. மூன்று நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், 41.10 அடியாக நீர் மட்டம் குறைந்திருக்கிறது. 10.3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சி பகுதி மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.காளம்பாளையம் முதல் மாதம்பட்டி வரை, சிறுவாணி ரோட்டை நான்கு வழியாக அகலப்படுத்தும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. பேரூர் அருகே காளம்பாளையத்தில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மரத்தை அகற்றினர். அப்போது, குறிச்சி - குனியமுத்துார் பகுதிக்கு சப்ளையாகும் சிறுவாணி குழாய் உடைந்தது. அதனால், ரோட்டில் ஆறாக தண்ணீர் ஓடியது. லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது.இத்தகவல் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 'பம்ப்' செய்வது நிறுத்தப்பட்டது. குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியை வாரியத்தினர் துவக்கியுள்ளனர். இதன் காரணமாக, குறிச்சி - குனியமுத்துார் பகுதிக்கு, குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்படும்.