உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாய்க்காலை காணவில்லை! ரூ.2 கோடியில் சீரமைத்தும் பயன் இல்லை; நீர் கொண்டு வர விவசாயிகள் எதிர்பார்ப்பு

வாய்க்காலை காணவில்லை! ரூ.2 கோடியில் சீரமைத்தும் பயன் இல்லை; நீர் கொண்டு வர விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில், 2 கோடி ரூபாய் செலவில் சீரமைத்த, வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் போனது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், பவானி ஆற்றில் நெல்லித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது. மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு ஓடியும், விவசாயம் செய்ய, இப்பகுதியில் கால்வாய் மற்றும் வாய்க்கால் பாசன வசதி தற்போது இல்லை. ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன், பவானி ஆற்றில் இருந்து, இயற்கையாக தண்ணீர் வரும் வகையில், சிறிய வாய்க்கால் அமைத்தனர். அதற்கு ஒ.வி.சி., வாய்க்கால் (ஒ. வெங்கட்ராம செட்டியார் வாய்க்கால்) என அழைத்து வந்தனர். கண்டியூர் மலை வனப்பகுதியில் துவங்கி, சுக்கு காபி கடை வழியாக, ராமைய கவுண்டன் புதூருக்கு, ஆற்றுத் தண்ணீர் செல்லும் வகையில், வாய்க்கால் அமைக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வாய்க்காலில் தண்ணீர் வராமல் நின்று போனது. ஆனால் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர், அடிக்கடி இந்த வாய்க்காலை சீரமைக்க, லட்சக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெயரளவில் வாய்க்காலை சீரமைப்பர். ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் வரும் வகையில், முழுமையாக பணிகள் நடைபெறுவதில்லை. கடந்த, 2023ம் ஆண்டு வாய்க்காலை சீரமைக்க, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் கண்டியூர் மலை வனப்பகுதியில், புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. சுக்கு காபி கடை வரை வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் அப்படியே நின்று போனது. வாய்க்காலை சீரமைக்காததால், பலர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் கட்டி உள்ளனர். பலர் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் அரங்கசாமி கூறியதாவது: இந்த வாய்க்காலில் வந்த தண்ணீரால், ராமைய கவுண்டன் புதூரில், 350 க் கும் மேற்பட்ட ஏக்கருக்கு பாசன வசதி கிடைத்து வந்தது. மேலும் இந்த வாய்க்கால் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே செல்வதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், பவானி ஆற்றில் குளிப்பதை தவிர்த்து, இதில் குளித்து வந்தனர். இதனால் இறப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. வாய்க்காலில் தண்ணீர் வரத்து நின்ற பிறகு, பவானி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தொடங்கினர். நீச்சல் தெரியாமல் ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லும் சிலர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். எனவே மாவட்ட பொதுப்பணித்துறை நிர்வாகம் சிறப்பு கவனம் எடுத்து, ஆக்கிரமிப்பு செய்தும், மண் மூடியும் உள்ள வாய்க்காலை சீரமைத்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில், தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை