அரோகரா கோஷம் முழுங்க சூரசம்ஹாரம் கோலாகலம்! மழையிலும் திரண்டு பக்தர்கள் பரவசம்
-- நிருபர் குழு -: பொள்ளாச்சியில், மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் சிவபெருமானிடமிருந்து சுப்ரமணியசுவாமி வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று மாலை சூரசம்ஹார திருவிழா நடந்தது. சுவாமி கோவிலிருந்து புறப்பட்டு, எஸ்.எஸ்., கோவில் வீதி கிழக்கு வழியாக சென்று, சத்திரம் வீதி மற்றும் தெப்பக்குளம் வீதிகள் சந்திப்பில் முதல் சூரனான கஜமுகா சூரன் வதம் நடந்தது. தெப்பக்குளம் வீதி வழியாக சென்று வெங்கட்ரமணன் வீதி சந்திப்பில் இரண்டாவது சூரனான சிங்கமுகாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து, வெங்கட்ரமணன் வீதியும், ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் மூன்றாவது சூரன் பானுகோபனையும், உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையத்தில் நான்காவது சூரனான சூரபத்மனையும் சுப்ரமணிய சுவாமி வதம் செய்தார். அதன்பின் மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தார். முருகப்பெருமான் சூரனை வதம் செய்கையில், விடாது பெய்த மழையிலும் பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர். அன்ன ஆகாரமின்றி விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்து, வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, வெள்ளரிக்காய் போன்ற பழங்கள், தயிரில் கலந்து பிரசாதம் தயாரித்து, சுப்ரமணிய சுவாமிக்கு படைத்து விரதத்தை முடித்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. கிணத்துக்கடவு கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், நேற்று, சஷ்டி குழு சார்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவிலில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். முத்துமலை முருகன் கோவிலில், நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 22ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜையும் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு சூரனை வதம் செய்ய எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோவிலில்,அன்னையிடம் இருந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கி கோவிலை சென்றடைந்தார். மாலை, 6:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் வகையில், வெவ்வெறு இடங்களில், கஜமுகா சூரன், சிங்கமுகா சூரன், பாலுகோபன், சூரபத்மனை வதம் செய்த பின் சுப்ரமணிய சுவாமி கோவிலை அடைந்தார். இன்று காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர். உடுமலை உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கடந்த, 22ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. மாலை, 3:15 மணிக்கு, முருகப்பெருமான் விரதம் இருந்து, அம்மை சக்தியிடம் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சக்தி வேலுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சூரனை வதம் செய்யும் போர்க்கோலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். பக்தர்களின் 'வெற்றி வேல், வீரவேல்' கோஷம் முழங்க, பிரதான வீதிகளில் ஆக்ரோஷமாக எழுந்தருளினார். கஜமுகா சூரனை மாரியம்மன் கோவில் அருகில் பழநி ரோட்டிலும், பானுகோபன் வடிவம் எடுத்த சூரனை குட்டை விநாயகர் கோவில் முன்பும், சிங்கமுகா சூரன் வடிவம் எடுத்த தலைகொண்டம்மன் கோவில் முன்பும், பத்மாசூரனை கொல்லன்பட்டறை முன்பாக வதம் செய்து, வெற்றி கொண்டார். தொடர்ந்து, சுவாமிக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று காலை, 10:30க்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. * பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை, 5:45 மணிக்கு, விளாபூஜை, வெள்ளிக்கவச அலங்காரம், அகத்திக்கீரையுடன் குளித்தளிகை படையல் நிவேதனம் நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 4:00 மணிக்கு. வீரவேல் முருகன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளி, நவ வீரர்கள் புடை சூழ, போர்க்கோலம் பூண்டு சூரனை வதம் செய்தார். * உடுமலை ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் கஜவல்லி, வன வல்லி சமேத சுப்ரமணியருக்கு, கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. * ருத்ரப்பநகர், சித்தி விநாயகர் கோவிலில், வள்ளி, தேவ சேனா சமேத குழந்தை வேலப்ப சுவாமிக்கு, நேற்று யாக சாலை பூஜைகள், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. * முத்தையா பிள்ளை லே-அவுட், ஸ்ரீ சோழீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள, சுப்ரமணிய சுவாமிக்கு, நேற்று சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. * போடிபட்டி முருகன் கோவில், சின்னபொம்மன்சாளை முருகன் கோவில், சோமவாரப்பட்டி பாலமுருகன் கோவில், உட்பட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது.