பாடங்களை புரிந்து படிக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
கோவை:கோவை புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில், தேசிய திறனாய்வு தேர்வில் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்ச்சி பெற்ற 229 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பேசியதாவது: மூன்றாண்டுக்கு முன்பு வரை என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. தற்போது மாவட்ட அளவில் நேரடியாக கண்காணித்து, மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாதிரி பள்ளிகளில் சேர்க்கை பெறுவதில் முன்னுரிமை பெறுகின்றனர். அவர்கள், ஜூனியர்களுக்கு இத்தேர்வின் நுணுக்கங்களை, கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி, தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் சிறந்தவர்களே. பாடங்களை ஆழமாக, உள்ளார்ந்து புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது பள்ளி தேர்வுகளின் வினாத்தாள்களும், புரிதலின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் 11 மாணவர்கள், கோவை நகரில் பிரசன்டேஷன் கான்வென்டில் இருந்து 11 மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார். புரோபெல் நிறுவன நிர்வாக இயக்குனர் வித்யா, தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சியாளர் முருகேசன், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளித்த, 140 ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.