துவங்கியது அன்பின் ஆடை மையம் நீங்களும் வாரி வழங்கி உதவலாமே!
நோயாளிகளுக்கு உதவும் வகையில், 'அன்பின் ஆடை' என்ற பெயரில், ஆடைகள் வழங்கும் மையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டது.'ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ்', புரோப்பல் நிறுவனம், அரசு மருத்துவமனை இணைந்து உள் நோயாளிகளுக்கு இலவசமாக ஆடை வழங்கும் மையம், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று துவங்கப்பட்டது.அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, புரோப்பல் நிர்வாக இயக்குனர் வித்யா, ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் நிறுவனர் கணேஷ் ஆகியோர், மையத்தை துவங்கி வைத்தனர்.'ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ்' நிறுவனர் கணேஷ் கூறுகையில், ''பல்வேறு கல்லுாரிகள், ஐ.டி., நிறுவனங்கள், அபார்ட்மென்ட்களுக்கு சென்று, பயன்படுத்தப்பட்ட ஆடைகளை பெற்று வந்து அதை மறுசுழற்சி செய்து, ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறோம். தற்போது வரை 200க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ஆடைகள் வழங்கியுள்ளோம்.அதன் தொடர்ச்சியாக, இந்த மையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை இம்மையம் செயல்படும்.அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்கள் உடன் இருப்போர் உள் நோயாளி சீட்டை காட்டி, ஒரு ஆடையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.பொது மக்கள் ஆடைகளை(புதிதாகவும் வழங்கலாம்) வழங்க விரும்பினால், 63747 13775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.