கூரியர் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்
கோவை : தபால் தாமதமாக சென்றதால், கூரியர் நிறுவனம் இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, காந்திபுரத்தை சேர்ந்த சாமுவேல் என்பவர், புரபசனல் கூரியர் நிறுவனம் வாயிலாக, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள பல்கலைக்கு, பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுவதற்காக முக்கிய ஆவணங்களை அனுப்பினார். இதற்காக, 110 ரூபாய் கட்டணம் செலுத்தினார். ஆனால் தபால் கால தாமதமாக சென்றதால், திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் சாமுவேல் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அவர், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனம், சேவை குறைபாடு செய்துள்ளதால், 110 ரூபாய் திருப்பி செலுத்துவதோடு, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.