உதவி கேட்பது போல் நடித்து போன் பறித்துச் சென்ற கும்பல்
கோவை உதவி கேட்பது போல் நடித்து, மொபைல் போனை பறித்துச் சென்ற மூவரை, போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம், புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் ஹர்சத், 23. கடந்த, 14ம் தேதி இரவு, ஹர்சத் தனது வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மூன்று பேர், ஒரு போன் செய்ய வேண்டும் எனக்கூறி, ஹர்சத்திடம் மொபைல் போன் கேட்டனர்.உதவி கேட்பதாக நினைத்து, ஹர்சத் போனை கொடுத்தார். பேசி முடித்த பின், ஹர்சத் அவர்களிடம் மொபைலை கேட்டபோது, திருப்பித்தர மறுத்தனர். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூவரும், ஹர்சத்தை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். ஹர்சத் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் போன் பறிப்பில் ஈடுபட்டது, திருச்சியை சேர்ந்த சிவா, 27, தேனி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், 21 மற்றும் திருப்பூரை சேர்ந்த சரத்குமார், 33 என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.