சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை சிக்கவில்லை! கேமரா பொருத்தி இரு இடத்தில் கூண்டு அமைப்பு
வால்பாறை; வால்பாறை அருகே, சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க, இரு இடங்களில் கூண்டு வைத்துள்ள நிலையில், மீண்டும் சிறுத்தை அந்தப்பகுதியில் உலா வருவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில் பணியாற்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மெனோஜ்முண்டா - மோனிகாதேவி தம்பதியின் 6 வயது மகள் ரோஸ்குமாரி.கடந்த, 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிந்த சிறுமியை, தாயின் கண் முன் சிறுத்தை கவ்வி சென்று கடித்து கொன்றது. இந்த சம்பவம் பச்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் குடும்பத்துக்கு, வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணா, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி ஆகியோர், இரண்டாம் தவணையாக, 9.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேரில் வழங்கினர்.இதையடுத்து, வால்பாறை வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், பச்சமலை எஸ்டேட் பகுதியில், 10 இடங்களில் கேமரா பொருத்தி, கூண்டு வைத்துள்ளனர். மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.அதனால், அதே பகுதியில் சிறுத்தையை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பச்சமலை எஸ்டேட் பகுதியில் சிறுத்தையை பிடிக்க இரண்டு இடங்களில் கூண்டு வைக்கபட்டுள்ளது. சிறுத்தையை ஈர்க்கும் வகையில் கூண்டினுள் இறைச்சி வைக்கப்பட்டுள்ளது.எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்கூடாது. மீண்டும் சிறுத்தை வர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீடுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான கோழி, நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.