தொழில்துறையின் தேவை; எம்.எல்.ஏ.,விடம் முறையீடு
கோவை; தொழில்துறைக்கான தேவை குறித்து, சின்னவேடம்பட்டி தொழிற்சங்கத்தினர் (சி.ஐ.ஏ.,) சட்டசபை தொழில் ஆய்வுக்குழு உறுப்பினர் எம்.எல்.ஏ., அருண்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.சின்னவேடம்பட்டி தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர், தேவகுமார் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார் பங்கேற்றார்.அப்போது, 'சின்னவேடம்பட்டி பகுதியில் சாலை மோசமாக இருப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும். தொழில்துறைக்கான வரி உள்ளாட்சி அமைப்புகளால் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் குறைக்க வேண்டும்.எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி பெரும்பாலும், குடியிருப்பு பகுதிகளுக்கே செலவிடப்படுகிறது. தொழில்துறை பகுதிகளுக்கும் நிதி ஒதுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, தொழில்துறையினர் முன்வைத்து, இதுகுறித்து வரவிருக்கும் சிறப்பு சட்டசபையில் பேச வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ., அருண்குமார், “தொழில்துறையினர் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.