உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மண்டல கோவில்களின் ஒரே இளவரசி பேரூர் கல்யாணி

கோவை மண்டல கோவில்களின் ஒரே இளவரசி பேரூர் கல்யாணி

பேரூருக்கு வருபவர்கள், பட்டீஸ்வரரை தரிசிப்பதோடு, பட்டீஸ்வரர் கோவில் யானையான, கல்யாணியை கண்டு ரசிக்காமல் செல்லமாட்டார்கள்.கல்யாணியை, கோவில் யானையாக மட்டும் பார்க்காமல், சேட்டை செய்யும் சுட்டி இளவரசியாகவும் பார்ப்பதாலே, கல்யாணிக்கு என, தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், கடந்த, 14.10.1991ம் ஆண்டு பிறந்தவள் கல்யாணி. இவளது தந்தை முதுமலை, தாய் காமாட்சி. தாய், தந்தையுடன் வளர்ந்து வந்த கல்யாணியை, கடந்த, 1994ம் ஆண்டு, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், முதுமலையில் இருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வந்தனர். தற்போது, கல்யாணிக்கு, 33 வயதாகிறது. கடந்த, 30 ஆண்டுகளாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் இளவரசியாக இருக்கிறாள்.பேரூர் படித்துறைக்கு செல்லும் வழியில் உள்ள யானை ஷெட்டில் கட்டி வைக்கப்படுகிறது. தினமும், காலை, 6:00 மணிக்கு, குளியல். அதனைத்தொடர்ந்து, கோவிலில், கோ பூஜை, கஜபூஜையில் பங்கேற்கும். காலை, 8:30 மணிக்கு, உணவு உண்ணுதல். மாலை, 3:00 மணி முதல் 5:00 மணி வரை, புதியதாக கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியில் குளித்து விளையாடுவது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்றவைகள் நடக்கும். மாலை, 5:00 மணிக்கு, மீண்டும் பசுந்தீவனம் வழங்கப்படும். ஒரு நாளுக்கு, சுமார், 180 கிலோ பசுந்தீவனம் வழங்கப்படுகிறது. தற்போது, கல்யாணி யானை, 9 அடி உயரமும், 4,550 கிலோ எடையும் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக, கல்யாணியை ரவிக்குமார் என்ற பாகன் பராமரித்து வருகின்றார். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருவிழாவான, மார்கழி திருவாதிரை உற்சவம் மற்றும் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் போது, நெத்திபட்டம் கட்டி அலங்காரத்தில் கோவிலை சுற்றி ஊர்வலம் வரும்.ஹிந்து சமய அறநிலையத்துறையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மட்டுமே, கோவில் யானை உள்ளது. இதனால், வேறு எந்த கோவிலுக்கும் கிடைக்காத செல்வமாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கல்யாணி கிடைத்துள்ளாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !