நிரம்பி ததும்பும் சோலையாறு: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
வால்பாறை; சாரல்மழை பெய்யும் நிலையில் சோலையாறு அணை நிரம்பி உள்ளதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்கிறது. மழை தீவிரமடைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இடையிடையே மழைப்பொழிவு குறைந்ததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் சரியத்துவங்கியது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்வதால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, 3ம் தேதி ஐந்தாவது முறையாக நிரம்பியது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து சாரல் மழை மட்டுமே பெய்கிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் குறையாமல் நீர்ததும்ப காட்சியளிப்பதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,347 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,645 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.