கோவையின் அடையாளமாகவிளங்கி வரும் ‛ரேஸ் கோர்ஸ்
கோ வை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ரேஸ் கோர்ஸ் பகுதி, 19ம் நுாற்றாண்டில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தேவைக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்பு என்கிறது வரலாறு. அரசு அலுவலகங்கள் விரிவடைந்த காலத்தில், ஆங்கிலேய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு சுகாதாரமான, காற்றோட்டமான குடியிருப்புகள் தேவைப்பட்டன. இதனடிப்படையில், அந்நாள் கலெக்டர் சல்லிவன், லண்டனிலுள்ள பங்களாக்கள், தெருக்கள் போன்ற வடிவமைப்பை பின்பற்றி, கோவையில் புதிய குடியிருப்பு பகுதியை உருவாக்க முனைந்தார். அதற்காக திருச்சி சாலை மற்றும் அவிநாசி சாலையின் இடைப்பட்ட இடத்திலிருந்த தோட்டங்கள், அரசு உத்தரவின் பேரில் கையகப்படுத்தப்பட்டன. பின், சுமார் அரை மைல் நீளமுடைய முட்டை வடிவ வட்டப்பாதை உருவாக்கப்பட்டது. அந்த காலத்திலேயே நுாறடி அகலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த சாலையின் நடுவில் வாகன பாதை, பக்கவாட்டுகளில் சாலையோர மரங்கள், நடைபாதை, சாக்கடை அமைப்பு, குடியிருப்பை சுற்றியும் வேலிகள் என, அந்நாளில் கோவையில் யாரும் காணாத நவீன நகரத் திட்டமிடல் செயல்படுத்தப்பட்டது. இந்த வட்டப்பாதை, நடை பயிற்சிக்கு மட்டுமல்லாமல், குதிரை பந்தயத்துக்கும் பயன்பட்டதால், பின், அது 'ரேஸ் கோர்ஸ்' என அழைக்கப்பட்டது. இன்று ரேஸ்கோர்ஸ், பசுமை, அமைதி, வரலாறு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் கோவையின் அடையாளமாக விளங்குகிறது.