உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆச்சிபட்டி வரை ரோடு படுமோசம்; புதுப்பிக்க வலியுறுத்தல்!

ஆச்சிபட்டி வரை ரோடு படுமோசம்; புதுப்பிக்க வலியுறுத்தல்!

வீணாகும் குடிநீர்

வால்பாறை ஸ்டேட் பேங்க் அருகில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், ஸ்டேட் பேங்க் அருகில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வால்பாறை நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும்.-- -சூர்யா, வால்பாறை.

குடிநீர் பிரச்னை

பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், போதிய அளவு குடிநீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.-- -ராஜசேகரன், அங்கலக்குறிச்சி.

அறுந்து கிடக்கும் மின் ஒயர்கள்

கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், தனியார் கம்பெனி அருகே ரோட்டோரத்தில் மின் ஒயர்கள் அறுந்து கீழே தொங்கிய நிலையில் உள்ளது. இதை மின்துறை அதிகாரிகள் கவனித்து, மின் ஒயர்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -சசி, கிணத்துக்கடவு.

ரோட்டை புதுப்பிக்கணும்!

பொள்ளாச்சி - கோவை ரோட்டில், சி.டி.சி., மேட்டில் இருந்து ஆச்சிபட்டி வரையிலும் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. வாகனங்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன. ரோட்டை புதுப்பிக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்துக்குமார், பொள்ளாச்சி.

குடிநீர் தட்டுப்பாடு

உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்னை ஏற்படுவதால், கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இப்பிரச்னை குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளனர். 13 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.- அருண்குமார், பெரியகோட்டை.

பழுதான இயந்திரம்

கஞ்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள, தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், மக்கள் பலர் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இதை விரைவில் சரி செய்ய வேண்டும்.-- -தினேஷ், பொள்ளாச்சி.

அதிவேக பஸ்களால் பாதிப்பு

உடுமலை-மூணார் ரோட்டில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிகமான வேகத்துடன் செல்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் செல்வதால் வாகன ஓட்டுநர்கள் பீதியடைகின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சசிபிரகாஷ், மானுபட்டி.

'குடி' மகன்கள் தொல்லை

உடுமலை, பசுபதி வீதியில் உள்ள டாஸ்மாக் கடையால், அப்பகுதி முழுவதும் 'குடி'மகன்களின் இடமாக மாறிவிட்டது. ரோட்டில் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் அவர்கள் நிலையில்லாமல் மோதும் வகையில் நடந்து செல்கின்றனர். மது அருந்தும் டம்ளர் உள்ளிட்ட கழிவுகளையும் அப்பகுதியில் வீசிச்செல்கின்றனர். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.- வானதி, உடுமலை.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை கச்சேரி ரோட்டில், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில், நான்கு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

கழிவுநீரை அகற்றணும்

உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குமார், உடுமலை.

தெருவிளக்குகள் எரிவதில்லை

உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள் ரோட்டில் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகள் வெளியில் சென்று வருவதற்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.- ஜெயக்குமார், உடுமலை.

பல்லாங்குழியான ரோடு

பொள்ளாச்சி, மரப்பேட்டை கந்தசாமி பூங்கா அருகே, பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வழியில் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.- -ஆனந்த், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ