தற்காலிக உடைமாற்றும் அறை கையோடு கொண்டு வரும் நிலை
வால்பாறை ;சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் தற்காலிக உடைமாற்றும் அறை அமைத்து, சுற்றுலா பயணியர் ஆனந்தமாக குளித்தனர்.வால்பாறையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால், அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வால்பாறை வந்தனர்.வால்பாறை நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளிக்க குடும்பத்துடன் சென்றனர். அங்கு பெண்கள் குளித்த பின் உடை மாற்ற அறை இல்லாத நிலையில், சுற்றுலா பயணியர் தற்காலிமாக செட் அமைத்து, பெண்கள் உடை மாற்றினர்.சுற்றுலா பயணியர் கூறுகையில், 'ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிகளில், இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், வால்பாறையை சுற்றிபார்க்க குடும்பத்துடன் வந்துள்ளோம்.இங்குள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளித்த பின் பெண்கள் உடை மாற்ற எந்த வசதியும் இல்லை. இதனால், நாங்களே தற்காலிமாக செட் அமைத்து, உடைகளை மாற்றிக்கொண்டோம். நகராட்சி சார்பில் சுற்றுலா பயணியர் பிரச்னையை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்,' என்றனர்.